Skip to main content

என் காதல் ஸ்வரம் நீ - 1

 



"அம்மா ப்ளீஸ் !! அழாத . எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க. ப்ளீஸ் மா !! நான் என்ன நிலாவுக்கா போறேன் ? இதோ இருக்கிற பெங்களூர்ல இருக்கிற காலேஜ்ஜுக்கு தானே மா போறேன் . என்ன ட்ரெயின்  ஏத்தி விட வரவேண்டாம்னு இதுக்கு தான் சொன்னேன். அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா. ரொம்ப எம்பாரஸ்சிங்க்கா இருக்கு. நான் என்ன சின்ன பிள்ளையா ?" முதலில் தணிந்த குரலில் ஆரம்பித்து பின் லேசாக குரலுயர்த்தினேன் நான்.

நான் .... ஸ்வரா சம்பத் .. திருவாளர் சம்பத் மற்றும் திருமதி மது சம்பத் தம்பதியின் ஒரே மகள். பெங்களூரின் புகழ் பெற்ற எம்மில் பிசினஸ் மேனேஜ்மென்ட்   இரண்டாம் செமஸ்டர் படிப்பிற்காக கிளம்பும்போது தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் . என்னுடைய பெரும்பான்மையான படிப்பு ஹாஸ்டலில் தான் . அப்பாவிற்கு வேலை காரணமாக பல ஊர்களுக்கு இடமாற்றம் அடிக்கடி வரும் என்பதால் நான் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு பழகிக்கொண்டேன் . இருந்தும் என்னவோ இது தான் முதல் முறை என்பது போல் அம்மா ட்ரெயின் ஏற்ற வந்தது மட்டுமின்றி அழவேறு செய்தது தான் என்னுடைய கடுப்பிற்கு காரணம்.

 

அப்பா வழக்கம் போல் அவரது கோல்கேட் விளம்பர சிரிப்பைக் காட்டி "இதென்ன நமக்கு புதுசாடா ? அவ பாவம், பொண்ண பிரிஞ்சு இருக்கணுமேன்னு அழறா. சின்னப் பிள்ளைய மன்னிச்சு விட்ரலாம் ஸ்வராமா" வழக்கம் போல தனது மனைவியை விட்டுகுடுக்காது வக்காலத்து வாங்கி என்னுடைய முறைப்பிற்கு ஆளானார் .

"இதெல்லாம் நம்ம ஏற்கனவே பேசி முடிவெடுத்தது தானேப்பா? என்னவோ புதுசா உங்க வீட்டம்மா அழறாங்க . இந்த அட்மிஷன் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கும் தெரியும் தானே ?" இடுப்பில் கைவைத்து முறைத்து பார்த்து நின்ற என்னிடம் அப்பா பார்வையாலேயே பொறுத்துப்போகும்படி கெஞ்சினார்.

இது எங்களுக்குள் வழக்கம் தான். ஒவ்வொரு முறையும் லீவு முடிந்து நான் ஹாஸ்டலுக்கு திரும்பும்போதும் அம்மா ஓவர் ட்ராமாட்டிக்காக அழுவதும் அப்பா எங்கள் இருவருக்கும் இடையில் கிடந்து .தவிப்பதும் வழமை தான் என்றாலும் இருபத்திமூன்று வயதாகும் என்னை வழியனுப்ப வந்துவிட்டு ஏதோ சின்னக் குழந்தையை அனுப்புவது போல அழுவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர் தானே மக்களே .

"ஆமாம்டா !! ஏன் சொல்லமாட்ட ! உன் வயசுப் பசங்கள எல்லாம் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி ஒருத்தன் கைல குடுத்துட்டு அக்கடான்னு இருக்கவேண்டிய நேரத்துல இப்படி ஊறவிட்டு ஊரு படிக்க அனுப்பறேன் பாரு , நீ ஏன் சலிச்சுக்கமாட்ட !! நான் கூட வரேன்னு சொன்னா அதுக்கும் நோ சொல்ற . அங்க போய் விஸ்வம் மாமா வீட்டுல தங்கிப் படினு சொன்னா அதுவும் கேக்கமாட்டேங்கற. உங்க அப்பாவும் உனக்கு சப்போர்ட் . நான் என்ன தான் பண்ண ?? அழத்தானே முடியும் !!" அம்மா இன்னும் கொஞ்சம் ஸ்ருதி சேர்த்து அழ அப்பாவைக் கெஞ்சலாய் பார்த்தேன்.

நீயே சமாளி என்பது போல அப்பா என்னைப் பார்த்து நிற்க வேறு வழி இல்லாது போக அம்மாவை நெருங்கி தோளோடு அணைத்துக் கொண்டு "என்ன மது நீ ? சின்னப் பிள்ளை மாதிரி அழறீங்களே! நான் என்ன போருக்கா போறேன்? காலேஜ்க்கு தானேமா போறேன். அதுவும் செகண்ட் செமஸ்ட்ர். ஏற்கனவே ஆறு மாசம் தனியா இருந்திருக்கிறேன் தானே? புதுசு மாதிரி அழறியேமா? நான் தான் நம்ம டீல் கரெக்டா ஃபாலோ பண்றேன்ல. அப்பப்போ வீடியோ கால் பண்றேன். வாட்ஸாப்ல கனெக்டட்டா இருக்கேன் தானேம்மா! மது மேடம் ஒய் க்ரையிங்?" எனக்கு அதற்குமேல் எப்படி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை.

என் முகம் போன போக்கைப் பார்த்ததாலேயோ என்னவோ அப்பா என் தோளில் கை போட்டவராய் " மதும்மா எனக்கு பசிக்குது." முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு சொல்ல மற்றதெல்லாம் மறந்தே போனது அம்மாவிற்கு. "இதுக்குத் தான் கிளம்பும் போது கொஞ்சமா சாப்பிடுங்கனு சொன்னேன். கேட்டாதானே. பச்சைப் பிள்ளை மாதிரி சாப்பிட அடம். ட்ரெயின் கிளம்பட்டும் நம்ம போய் சென்ட்ரல் கஃபேல இடியாப்பமும் சொதியும் சாப்பிடலாம்." என்றாள் என்னை மறந்தவளாய். அம்மா அப்படித்தான். அவளுக்கு அப்பா தான் முதல் குழந்தை. அவரை நன்கு பார்த்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுவாள்பிரபல நியூரோ சர்ஜன் சம்பத்குமார் அவளைப் பொறுத்தவரை தன்னை சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர். சரியாக நேரத்துக்கு சாப்பிடக் கூட மாட்டார் என்று அந்தந்த வேளைக்கு அவருக்கு அழைத்து நினைவு படுத்துவாள்.

 

 அப்பாவிற்கும் அம்மாவின் இந்த கவனிப்பு பிடித்திருந்தது. இருவரையும் முதலில் பார்ப்பவர்கள் காதல் திருமணம் போல என்று தான் நினைப்பார்கள். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. திருமணத்திற்குப் பின்பான காதல் இருவருக்கும். என் நட்பு வட்டத்தில் பலர் பொறாமை கூடப் பட்டிருக்கின்றனர்

 

ஒருவழியாக அம்மாவின் கவனத்தை  திசைதிருப்பிய அப்பா புருவங்களை உயர்த்தி எப்படி என்பதாய் கேட்க அம்மா பார்க்காத பொது நானும் அப்பாவிடம் எனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சூப்பர் என்றேன். எனது ட்ரெய்னும் கிளம்ப சிக்னல் கொடுக்க நானுமே இருவரிடமும் விடை பெற திரும்பினேன். அம்மா குளம்கட்டிய கண்களுடன் என்னை அணைத்துக்கொள்ள அப்பா ஆதுரமாய் அம்மாவை அணைத்தபடி என்னிடம் " சும்மா சும்மா அம்மாவ கவலைப்பட விடக்கூடாது. கரெக்டா அந்தந்த டைத்துக்கு போன் பண்ணனும். ஒழுங்கா சாப்பிடணும். எதாவது வேணும்னா ஒடனே எனக்கு ஒரு கால் பண்ணனும் சரியா" நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராக்கும் என்ற விரைப்புடன் கூறினாலும் இறுதியில் அவரது குரலும் உடைபடும் போல தான் இருந்தது.

"எஸ் பாஸ் ." என்று சிரித்தபடி அவரையும் அணைத்துக்கொண்டேன். அம்மா தான் "போதும் போதும் கொஞ்சினதெல்லாம். அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஸ்டேஷன் வந்து தான் பாசம் பொங்கும். நேரமாச்சு. கண்ணா நீ போய் சீட்ல உக்காரு . மத்ததெல்லாம் போன்ல பேசிக்கலாம் , பத்திரமா போய்ட்டு வா." கஷ்டப்பட்டு அழுகையை அடக்கியவளாய் அம்மா சொல்ல அப்பா இது தான் உனக்கான சான்ஸ் என்பது போல கண்களைக் காட்ட இருவரையும் ஒருமுறை அணைத்து விடைகொடுத்தவளாய் ட்ரெயினுள் ஏறினேன். என்னை இடித்தவனாய் நெடுநெடுவென வளர்ந்திருந்த ஒருவன் பெரிய ட்ராலி சூட்கேசை இழுத்தவாறு உள்ளேறினான். இடித்து செல்கிறோமென்ற சமரனை கூட இல்லை. சாரி சொல்லவேண்டுமென்ற  மனேர்ஸும் இல்லை. மாடு மாதிரி இருந்தான். அவன் பின்னே இன்னொருவனும் ஏறி என்னைக் கடந்து சென்றான்.

சாதாரண நேரமாக இருந்தால் அம்மா அவனை இழுத்துப்போட்டு நாலு அரை கொடுத்திருப்பாள் . இன்று அதற்கான மனநிலையில் யாருமே இல்லாததால் ஒருவருக்கொருவர் விடைகொடுத்துக்கொண்டோம் . ட்ரெயின் நகரத்துவங்க பிரியமானமில்லாது கை ஆட்டியபடியே உள்ளே வந்து என்னுடைய இடத்தில் அமர்ந்தேன். ஏசி முதல் வகுப்பு டிக்கெட் அப்பா புக் செய்திருந்தார். எனக்கு எதிர் இருக்கையில் இருவர் அமர்ந்திருந்தனர் . அதில் ஒருவன் சற்றுமுன் என்னை இடித்துவிட்டு திரும்பியும் பாராது சென்றவன். மற்றவன் அவனைத் தொடர்ந்து ஏறியவன் போல. நான் எனது ஷோல்டர் பேக்கில் இருந்து சமீபமாக வாங்கிய நாவல் ஒன்றை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன்.

 

பொதுவாகவே நான் அதிகம் பேசும் ஆளில்லை. அதற்காக என்னை இண்ட்ரோவேர்ட் என்றும் சொல்ல இயலாது. தேவை இருந்தால் அதுவும் எனக்கு சரி என்று பட்டால் மட்டுமே பேசும் ரகம். அதுவும் எதையும் முகத்திற்கு நேர் பேசிவிடும் ரகம். ஏனோ எனக்கு எதிரில் இருக்கும் இருவரிடமும் பேசவே தோன்றவில்லை. இயர்போட்ஸை மாட்டிக்கொண்டு நாவலை ரசிக்கத் தொடங்கினேன். பாட்டு எதுவும் கேட்காத போதும் இயர்போட்ஸ் மாட்டிக்கொள்வது பயண நேரத்து பழக்கம் எனக்கு. தேவை இல்லாத பேச்சுவார்த்தைகளை பல நேரங்களில் இது தவிர்க்க உதவும். அதே நேரம் சுற்றி என்ன நடக்கிறதென்பதிலும் கவனம் வைத்துக்கொள்ள உதவும்.

 

"இந்த மாதிரி ஏதோ ஒரு புக்கை வச்சுக்கிட்டு நான் படிச்ச மேதாவினு காட்டிக்கறதுல சிலருக்கு அவ்வளவு சந்தோஷம்.பாரேன் இந்த ஊர்ல இருந்துகிட்டு இவங்க இந்த பெரிய ரைட்டரோட புக்கெல்லாம் வாசிக்கரங்களாமாம். எவ்ளோ சீன் பாத்தியா? நம்ம பாக்கணும் நம்ம இவகூட பேசணும்னு தானே இவ இவ்ளோ சீன் போடறா.?" என்னை இடித்து சென்ற கிறுக்கன் தான் தனதருகில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 'லூசாடா நீ? இந்த ஊர்ல இருந்தா நான் வெளிநாட்டு எழுத்தாளரோட புக் வாசிக்க கூடாதா? யாரு வேணா புக் வாங்கி வாசிக்கலாமே இன்ட்ரெஸ்ட் இருந்தா? ஆன்லைன்ல கூட புக் வாசிக்கலாம், யாரோட புக் வேணும்னாலும் வாசிக்கலாம்னு இந்த லூசுக்கு தெரியாதா? எனக்கு கேக்காதுனு நினைச்சுகிட்டு பேசறானா? இவன் என்னை பாக்கணும்னு நான் சீன் போடறேனா? கிறுக்குப்பயலே!' அடிக்கத்துடித்த கைகளை அடக்கியபடி அமர்ந்திருந்தேன்.

"இந்த ஊர்ல இருந்து வந்தா வேர்ல்ட் நோன் ரைட்டரோட புக் வாசிக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா யுவன்? ஆன்லைன் போனா எல்லாரோட புக்குமே வாசிக்கலாமே. தேவை இல்லாம பேசி அடிவாங்காத. பேசாம வா." என்றொரு பதில் எதிர்பாராத விதமாக அவனுடனிருந்தவனிடம் இருந்து வந்தது. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சபாஷ் இதில் ஒருத்தன் தான் லூசு. மற்றவன் நார்மலா தான் இருக்கான் என்றெண்ணிக்கொண்டேன்.

ஓகே ஆன்லைன்ல யாரோட கதை வேணும்னா வாசிக்கலாம் ஓகே. ஆனா எதோ குக்கிராமத்துல இருந்துகிட்டு இவங்க இங்கிலிஷ் புக் தான் வாசிப்பாங்களோ? எல்லாம் சீன்ஏன் தெரியுமா? இங்க ரெண்டு ஹண்ட்ஸோமான பசங்க இருக்கோமேன்னு சீன் போட தான். புரியுதா? சப் நாடக் ஹை பாய். இங்கோ அட்டென்சன் சாஹியே. சப் லோக் இங்கோ தேக்னா சாஹியே . இசிலியே ஐசி நாடக் கர்ரஹி பாய். (எல்லாம் நாடகம் ப்ரோ. எல்லாரும் தன்னை பார்க்கணும். அதுக்காக இந்த பொண்ணு நாடகமாடுது.) என்றான் அந்த நெடுமாறன்.

 

இவனை நாலு சாத்து சாத்துனா தான் என்ன! மனசுக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் போக, இன்னும் எவ்வளவு தூரம் தான் போகிறான் பார்க்கலாம் என்று தோன்ற அமைதி காத்தேன். இவன் பெரிய இவன், இவனோட அட்டெண்ஷன் எனக்கு வேணுமாக்கும். போடா புண்ணாக்கு தலையா! மனதுக்குள் தாராளமாக அவனைத் திட்டித் தீர்த்தேன்

 

"அப் க்யோன் ஹிந்தி மே பாத் கர்ரஹோ தும்?" என்று மற்றவனின் குரல் கேட்க, 'அதானே! இவன் ஏன் இப்போ ஹிந்தில பேசினான்?' என்று நான் யோசிக்கும் போதே " காவ்வாலி கோ ஹிந்தி கைசா மாலூம் ஹோகா பாய். இஸிலியே ஹிந்தி மே போல்தா ஹும். மேரா சேஃப்டி கீ பர்வாஹ் பீ கர்னா ஹைனா பாய்" என்றான் நெடுமாறன். (இந்த கிராமத்துப் பெண்ணுக்கு ஹிந்தி தெரியப்போவதில்லை ப்ரோ. என்னுடைய பாதுகாப்பையும் பற்றி நான் யோசிக்கனுமில்லையா? அதான்.)

 

'அட அற்பப் பதரே! இப்போ தான் எல்லாரும் எல்லா மொழியும் கத்துக்கறாங்களே! இவன் மென்டலா? இல்லைன்னா ஆதி காலத்து மனுஷனா? அசைலம்ல இருந்து தப்பி ஓடிவந்துட்டானா? இவனே இவனை அழகன்னு சொல்லிக்கறான். நான் என்னமோ இவங்க பாக்கனும்னு புக் வாசிக்கறேன்றான். கடவுளே நான் பெங்களூர் போய் இறங்கறதுக்குள்ள கொலைக்கேசுல உள்ள போகாம இருக்கனும் ஆண்டவா' வேண்டியபடி இருந்தேன். "மேரே க்யால் மே தும் ஓவர்டூ கர்ரஹே ஹோ. வோ தோ ஹமாரே யஹான் தேக்தி பீ நஹி. தூ க்யோன் இத்தினி ஷோர் மச்சா ரஹே ஹோ?" (என்னை பொறுத்தவரை நீ ரொம்ப யோசிக்கற. அந்தப் பொண்ணு நம்ம சைடு திரும்பிக் கூட பாக்கல. நீ ஏன் இவ்வளவு சீன் போடற?). என்றான் மற்றவன். பரவாயில்லை இதில் ஒன்று தான் பைத்தியம். மற்றவன் தெளிவு தான் என்றெண்ணினேன்.

 

"யே சப் டெக்னிக் ஹை பாய். ஹம் யே சோச்சேங்கே கீ யே பகுத் அச்சீ லட்கீ ஹை. இஸிலியே யே நாடக். இத்னே ஹாண்டஸம் தோ மர்த் அகர் பாஸ்மே பைட்டே தோ கௌன் நஹி தேக்தா பாய்?" (இதெல்லாம் இவங்க டெக்னிக் ப்ரோ. இவ்வளோ ஹாண்ஸம்மா ரெண்டு ஆண்கள் பக்கத்துல இருந்தா யாரு தான் பார்க்க மாட்டாங்க) என்றான். 'அடச்சே மன்மத ராசா! போடா புள்ளி ராஜா. இவனுங்கள பாத்துட்டாலும்.' கடுப்புகள் டண் கணக்கில் ஏற கண்களை இறுக்க மூடி பத்து வரை மனதுக்குள் எண்ணி என் கோபத்தைத் தணித்துக் கொண்டேன்.

 

ஆனால் இந்த நெடுமாறன் என்னிடம் அடி வாங்காமல் போகும் எண்ணமே இல்லை போல. "உங்கள உங்கப்பாம்மா ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க? இந்தாங்க என்னோட நம்பர். கால் மீ இஃப் யூ வாண்டு ஹேங்கௌட் எனி டைம்" அவனது விசிட்டிங் கார்டை என் முன் வந்து நின்று என் புத்தகத்திற்குள் திணித்தான்

 

இதற்கு மேல் பொறுமை காத்தால் நான் தான் பைத்தியம் என்று தோன்ற கையிலிருந்த புத்தகத்தால் அவன் தலையில் நான்கு அடி போட்டு " யூ இடியட். நானும் பொறுமையா இருக்கனும்னு பாத்தா என்னோட பொறுமைய நீ ரொம்ப சோதிக்கற. மேனர்ஸே இல்லையா உனக்கு? முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா? ஹிந்தி ஏக் பாஷா ஹீ ஹை. கோயி பீ லேர்ன் கர் சக்தே ஹை. உல்லு ஜைசா பாத் மத் கர். இவரு பெரிய அழகரு! போடாங்க!! அப்படியே நீ ஹாண்ஸம்மா இருந்தாலும் எனக்கென்ன டா லூசே! நினப்புத்தான் பொழைப்பக் கெடுக்குமாம். இன்னொரு முறை என் பக்கம் திரும்பின, ட்ரெயின் விட்டு இறங்கும் போது ஃப்ராக்சரோட தான் இறங்குவ ப்ளடி ஃபூல். மைண்ட் யுவர் பிஹேவியர்' என்று கத்திவிட்டு மேல் பெர்த்தில் ஏறி படுத்து விட்டேன். (ஹிந்தி ஒரு மொழி தான். யார் வேண்டுமானலும் கற்றுக் கொள்ளலாம். முட்டாள்தனமா பேசாத.)

 

அங்கே நின்றால் இவனை இன்னும் நன்கு அறைந்து விடுவோம் என்று தோன்ற நகர்ந்தேன். ஆனாலும் கோபம் அடங்கவில்லை. பெர்த்தில் ஏறும் போதும் மற்றவன் வாய் பொத்தி சிரிப்பது கேட்டது. நெடுமாறனை இழுத்து அவனருகில் அமர செய்து "அடி பலமா? நாந்தான் சொன்னேனே. வாயவச்சுகிட்டு சும்மா வரணும். இல்லைன்னா இப்படித்தான்" அடக்கமுடியாத சிரிப்புடன் பேசுவது கேட்டது. "இல்ல பாய். அவ என்ன சரியா பாக்கல. அதான். பாத்திருந்தா...." என்று முடிப்பதற்குள் உடனிருந்தவன் "ஈவ்டீசிங் கேசுல உள்ள போயிருப்ப, இல்லைன்னா அவங்க கிட்ட அடி வாங்கியே செத்திருப்ப. அடங்குடா. இறங்குற வரைக்கும் எதுவும் பேசாத. மூச்!!" என்றான்.

 

'ஹாங்! அந்த பயம் இருக்கட்டும்' மனதுக்குள் சிரித்தவளாய் தூங்க எத்தனித்தேன். இது ஒன்றும் புதிதல்ல எனக்கு. ஒருசில சமயம் இதுபோல் நடக்கும் தான்சிலர் முறைத்தாலே திரும்பிக் கொள்வர்ஒருசிலர் கன்னம் பழுக்க வாங்கிவிட்டு ஒதுங்குவர். அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் நாம் பயந்தால் இன்னும் தான் இதுபோல் நடந்து கொள்வர். எதிர்த்தால் பத்தில் எட்டு பேர் வாலை சுருட்டிக் கொண்டு அமைதி காப்பர். மீதி இருவர் அறை வாங்கி பின் அகன்று போவர். இதற்கெல்லாம் பயந்தால் தனியாக இத்தனை முறை பயணிக்க முடியாது.

 

ஆனால் ஒருவேளை அம்மா இதற்குத்தான் பயந்தாள் போல. பாவம். நாம் தான் ரொம்ப அலட்டிக் கொள்கிறாள் என்று நினைத்து விட்டோம். காலையில் இறங்கி முதல் வேலையாக அவளுக்கு அழைத்து பேச வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன். இரண்டாம் செமஸ்டர் இது. இன்னும் ஒருவருடம் தான் படிப்பு. அதன் பின்பு வேலை தேடிக் கொள்ளலாம்

 

பொதுவாக யாரிடமும் அவ்வளவு நட்பு பாராட்டும் ரகமில்லை நான். என் வகுப்பில் பலருக்கு என்னைத் தெரிந்திருக்காது. பள்ளியிலும் அப்படித்தான். யாரிடமும் அதிகம் பேசாத என்னையும் பேச வைத்துப் பழக வைத்தவள் எனதருமை சிந்து மட்டுமே. என்னை விட ஒருவருடம் இளையவள். பள்ளியில் பேச்சுப் போட்டியில் அறிமுகமாகி என்னைத் துரத்தி துரத்தி நட்பாக்கியவள். இப்போது சென்னையில் பிசிஏ இறுதியாண்டு முடிக்கப் போகிறாள். நாளை காலை பெங்களூர் சென்று இறங்கியது அவளுக்கும் அழைத்துப் பேச வேண்டும்

 

நானாக அழைத்தால் அவள் என்ன சொல்வாள் என்றெண்ணியதும் தானாக முறுவல் ஒன்று ஒட்டிக் கொண்டது. நாளை எனக்கு என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ!! பாக்கலாம்.

 


Comments

Post a Comment